நாமகிரிப்பேட்டை, பிப்.10: ஆர்.புதுப்பட்டியில் 100 ஆண்டுக்கும் மேலாக முட்டையிடாத கோழி மற்றும் பனங்கருப்பட்டியை வைத்து அம்மனை வழிபடும் விநோத பூஜை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டி பகுதியில் பிரசித்திபெற்ற ஒட்டச்சாயி அம்மன் கோயில் உள்ளது. கடந்த 150 ஆண்டுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணி கோயில் வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக பிரசவம் நடந்தது. அப்போது இறக்கும் தருவாயில் இருந்த பெண், எனது குழந்தையை ஊர்மக்கள் காப்பாற்றவேண்டும், இந்த பகுதியில் அம்மனுக்கு கோயில் கட்டி வருடந்தோறும் முட்டையிடாத கோழி மற்றும் பிரவசத்திற்கு பின்பு பயன்படும் பனங்கருப்பட்டி, வசம்பு உள்ளிட்டவைகளை கொண்டு தைமாதம் பூஜை நடத்தவேண்டும் எனக் கூறிவிட்டு இறந்துவிட்டார். அன்றிலிருந்து இதுவரை இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தைமாத கடைசி ஞாயிற்றுகிழைமையான நேற்று, ஊர்பொதுமக்கள் முட்டையிடாத கோழிகள் மற்றும் பனங்கருப்பட்டியை கொண்டுவந்து ஒட்டச்சாயி அம்மனுக்கு பொங்கல் வைத்து, கோழியை அறுத்து பூஜை செய்தனர். இவ்விழாவில் ராசிபுரம், வடுகம், புதுப்பட்டி, மலையாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
