மும்பை: 20 அணிகள் பங்கேற்றுள்ள 10வது ஐசிசி ஆடவர் டி.20 உலக கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7ம் தேதி முதல் நடந்த வருகிறது. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் 4 பிரிவுகளிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். லீக் சுற்றில் தினமும் 3 ஆட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் எதிர்பார்த்ததை விட போட்டிகள் விறுவிறுப்பாக உள்ளது. கத்துக்குட்டி அணிகள் சாம்பியன் அணிகளுக்கும் கடும் சவால் அளித்து வருகின்றன.
ஏ பிரிவில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து கடும் சவால் அளித்தது. நெதர்லாந்து வெற்றியை நெருங்கி வந்த நிலையில் 19வது ஓவரில் 3 சிக்சர்களை கொடுத்ததால் தோல்வியை சந்தித்தது. தோல்வி விளிம்பில் இருந்த பாகிஸ்தான் தப்பி பிழைத்தது. இதேபோல் சி பிரிவில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து வெற்றிக்காக கடுமையாக போராடியது. மும்பை வான்கடேவில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அமெரிக்கா அதிர்ச்சி கொடுத்தது. இந்தியா 77 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் கேப்டன் சூர்யகுமாரின் போராட்டத்தினால் 150 ரன்னை தாண்டியது.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் டி பிரிவில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியும் விறுவிறுப்பாக இருந்தது. இதேபோல் வான்கடே ஸ்டேடியத்தில் சி பிரிவில் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்தின் தலைதப்பியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய நேபாளம் அணிக்கு கடைசி ஓவரில் 4 விக்கெட் கைவசம் இருக்க 10 ரன்களே தேவைப்பட்டது. ஆனால் சாம்கரன் யார்க்கர்களாக வீசி 5 ரன் மட்டுமே கொடுத்தார். இதனால் 4 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றது. கொழும்பில் பி பிரிவில் இலங்கைக்கு எதிரான நேற்றிரவு நடந்த போட்டியில் அயர்லாந்து அணி போராடி 20 ரன் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது. கத்துக்குட்டி அணிகள் பெரிய அணிகளுக்கு கடும் சவால் அளிப்பது உலக கோப்பையில் சுவாரஸ்யத்தை கூட்டி இருக்கிறது. வரும் நாட்களிலும் இந்த கத்துக்கட்டிகள் சாம்பியன் அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வாவ்… மாஜிக்கள் பாராட்டு!
நேபாள அணியின் ஆட்டத்தை மாஜி வீரர்கள் பாராட்டி உள்ளனர். இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங், உலகின் சிறந்த அணிகளில் ஒன்றை எதிர்கொண்டு, கடைசி பந்து வரை போராடியது அவர்களின் நம்பிக்கையை காட்டியது,என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். தென்ஆப்ரிக்கா முன்னாள் வேகம் டேல் ஸ்டெயின், “நேபாளம் அணியே.. உங்களுக்கு எப்போதாவது எனது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் எப்போது வேண்டுமானாலும் உதவத் தயாராக இருக்கிறேன். மென்மேலும் உயருங்கள்’’ என பதிவிட்டுள்ளார். அஸ்வின் “நேபாளத்தின் ஆட்டம் நம்பமுடியாததாக இருந்தது. வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடுகளில் நேபாளம் மிகச் சிறந்த அணிகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை’’ என தெரிவித்துள்ளார்.
சும்மா விளையாடிவிட்டு போக வரவில்லை!
இங்கிலாந்துக்கு எதிராக போராடி தோற்ற நேபாள அணி கேப்டன் ரோஹித் பவுடல் கூறுகையில், “பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என எல்லா பக்கத்திலும் 100% கொடுத்தோம். கடைசி 5 ஓவரை எப்படி ஆட வேண்டும் என ஏற்கனவே கணக்கிட்டோம். கடைசி ஓவரில் 10, 12 ரன் எடுக்கும்படி பார்த்துக் கொள்ள திட்டமிட்டோம். அதை நோக்கியே விளையாடினோம். எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல் எங்களையும் யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. சும்மா விளையாடிவிட்டு போக வரவில்லை. எங்கள் ரசிகர்கள் மிகவும் ஆர்வம் உடையவர்கள். அவர்கள் பெரும் திரளாக எங்களை ஆதரிக்க இந்தியா வந்துள்ளனர். எங்கள் செயல்பாட்டால் நாடு பெருமை அடைந்து இருக்கும்” என்றார்.
