மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் கர்நாடகா அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டி, மும்பையில் கடந்த 6ம் தேதி முதல் நடந்து வந்தது. இந்த போட்டியில் மும்பை – கர்நாடகா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 120, கர்நாடகா 173 ரன்கள் எடுத்தன. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி 377 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆகாஷ் ஆனந்த் 70, முஷீர் கான் 49, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்தனர்.
பின்னர், 325 ரன்கள் வெற்றி இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய போதும், மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் அட்டகாசமாக ஆடி ரன்கள் குவித்து சதம் விளாசினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த அவர் 130 ரன்களில் ஆட்டமிழந்தார். பின் வந்த கேப்டன் தேவ்தத் படிக்கல் 39, ஸ்மரன் ரவிச்சந்திரன் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்தனர். வித்யாதர் பாட்டீல் ஆட்டமிழக்காமல் 31 ரன் எடுத்தார். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் கர்நாடகா 73.4 ஓவரில் 6 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. அதனால், கர்நாடகா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
* ஜம்மென்று வென்ற ஜம்மு காஷ்மீர்
இந்தூரில் நடந்த மற்றொரு ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் ஜம்மு காஷ்மீர் 194, மத்தியப்பிரதேசம் 152 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஜம்மு காஷ்மீர் 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதையடுத்து 291 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மத்தியப்பிரதேசம் அணி, 234 ரன்களுக்கு சுருண்டது. அதனால், 56 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த ஜம்மு காஷ்மீர் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் பந்து வீச்சாளர் அகிப் நபி முதல் இன்னிங்சில் 7 விக்கெட், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் என, மொத்தம் 12 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்.
* இந்தியாவுடன் ஆட பாக். 3 நிபந்தனைகள்
அபுதாபி: வரும் 15ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் நடக்கவிருந்த உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆட மாட்டோம் எனக்கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்நிலையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இமெயில் அனுப்பி உள்ளது. அதில், ‘இந்தியாவுடன் ஆட மறுப்பது, கிரிக்கெட் விளையாட்டையும், அதில் உள்ள பெரும்பாலான உறுப்பு நாடுகளையும் பாதிக்கும். பாக்.கின் முடிவால் பெரியளவில் நிதியிழப்பு ஏற்படும். எனவே, பாக். தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவுடன் ஆட 3 நிபந்தனைகளை பாக். கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேசத்துக்கு கூடுதல் இழப்பீடு, உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேறி இருப்பினும், வங்கதேசத்துக்கு பங்கேற்பு கட்டணம், எதிர்காலத்தில் ஐசிசி போட்டியை நடத்த உரிமை போன்றவற்றை பாக். கோரியுள்ளதாக தெரிகிறது.
