நாகர்கோவில், பிப்.3: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் துறைசார்ந்த அலுவலர்களிடையே ஆய்வு மேற்கொண்டு பின்னர் கூறியதாவது:குழந்தைகள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபடும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால்தான் குழந்தைகள் பாதுகாப்பு மாவட்டமாக உருவாக்க முடியும். குழந்தைகள் பிரச்னைகள் மற்றும் பாலியல் தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்பட்டால், மாவட்ட குழந்தைகள் நலகுழு, குழந்தைகளுக்கான இலவச சேவை எண் 1098 மற்றும் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடக்கூடிய அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்கள் குறித்த பயிற்சியினை குழந்தைகள் நலன் சார்ந்த துறை அலுவலர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக வழங்க வேண்டும். இப்பணிகளில் ஈடுபடக்கூடிய அனைத்து துறைசார்ந்த அலுவலர்களையும் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சித்தலைவருடன் இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு மாவட்டமாக உருவாக்கிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் புஷ்பராஜா,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜெயபிரகாஷ், அனைத்துத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சைல்டு லைன் இயக்குநர், காவல்துறை ஆய்வாளர்கள், குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
