×

டிவைடர்கள் இல்லாததால் செல்லப்பம்பாளையம் பிரிவில் விபத்து ஏற்படும் அபாயம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி – உடுமலை ரோடு செல்லப்பம்பாளையம் பிரிவில், டிவைடர்கள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைகின்றனர்.

பொள்ளாச்சி நகரிலிருந்து பிரிந்து செல்லும் முக்கிய சாலைகளில் ஒன்றான, உடுமலை ரோட்டில் பகல் மற்றும் இரவு என தொடர்ந்து வாகன போக்குவரத்து உள்ளது. அதிலும், இந்த வழியாக கனரக வாகங்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக உள்ளது.

இதனால், உடுமலை ரோட்டில் அடிக்கடி விபத்து நேரிடும் சில பகுதிகளை கண்டறிந்து, டிவைடர்கள் மற்றும் மித வேகத்தடையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், உடுமலை ரோட்டில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடமான, கஞ்சம்பட்டி கிராமத்துக்கு செல்லும், செல்லப்பம்பாளையம் பிரிவு பகுதியில் சில ஆண்டுக்கு முன்பு வரை அப்பகுதியில் டிவைர்கள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும் அவ்வப்போது விபத்து நேரிட்ட சம்பவம் நடைபெற்றது.

ஆனால் அண்மை காலமாக, செல்லப்பம்பாளையம் பிரிவில் இருந்த டிவைடர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, அங்கிருந்த தானியங்கி சிக்னல்கள் செயல்பாடும் முடங்கியது. இதனால் இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகனத்தால் விபத்து தொடரும் அபாயம் உள்ளது.

உடுமலை ரோட்டில் விபத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டாலும், செல்லப்பம்பாளையம் பிரிவில் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, அப்பகுதியில் மித வேகத்தடை அமைப்பதுடன், தானியங்கி சிக்னல்களும் அமைத்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pollachchi ,Pollachi-Udumalai Road Sellappalayam ,Udumalai Road ,Pollachi ,
× RELATED முத்துப்பேட்டை பேரூராட்சியில்...