சூராசந்த்பூர்: மணிப்பூரில் சுராசந்த்பூரில் பழங்குடியின அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மணிப்பூரில் அரசு அமைப்பதில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்றதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எம்எல்ஏக்கள் பங்கேற்றதை கண்டித்து குகி பழங்குடியின அமைப்புகள் சார்பில் நேற்று முழு அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
குக்கி மாணவர் அமைப்பின் சுராசந்த்பூர் பிரிவு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 24 மணி நேர முழு அடைப்பை அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் மற்றொரு அமைப்பான ஜே7 குக்கி-ஜோ பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. இதன் காரணமாக சந்தைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
தற்போதைய சூழலில் மாநில அரசு அமைப்பதில் குக்கி-ஜோ எம்எல்ஏக்கள் பங்கேற்பை உள்ளடக்கிய எந்த ஒரு நடவடிக்கைக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதே இந்த போராட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர். புதிய அரசின் துணை முதல்வராக உள்ள குக்கி எம்எல்ஏ நெம்சா கிப்கென் மற்றும் ஜோ மற்றும் ஹ்மார் சமூகத்தை சேர்ந்த எல்எம் கவுட்டே மற்றும் சனாடே ஆகியோரின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டது. இந்த மூன்று பேரும் பாஜ எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
