ஸ்ரீவில்லிபுத்தூர்: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ.40 வரை உயர்ந்துள்ளதால் பால்கோவா பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடுத்துள்ள போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு நிலவுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில ஓட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டு விறகு அடுப்பிற்கு மாறியுள்ளன. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே பால்கோவாதான் நினைவுக்கு வரும். தித்திக்கும் சுவையுடன் தரமாக தயாரிக்கப்படுவதால் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பால்கோவா தயாரிப்பு பணியில் நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் விறகு அடுப்பில் முந்திரி கொட்டை கழிவு, தீக்குச்சி கழிவு போன்றவைகளை பயன்படுத்தி பால்கோவா தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது பெரும்பாலான இடங்களில் காஸ் சிலிண்டர் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது வர்த்தக காஸ் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பால்கோவா தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பால்கோவா விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 வரை உயர்ந்துள்ளதால் பால்கோவா பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
