×

அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சமூக நலன் மற்றும் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2வது வாரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு 3வது வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4வது வாரமும் கோடை விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களில் மாற்றுப் பணியில் குழந்தைகளுக்கு உணவூட்டும் பணிகள் எந்த இடையூறுமின்றி நிறைவேற்றப்படும்.

இந்த ஆண்டு மே மாதம் முழுவதும் அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதனை அரசு ஏற்று, மே மாதம் முழுவதும் அதாவது 1.5.2026 முதல் 31.5.2026 முடிய 31 நாட்களுக்கு அனைத்து குழந்தைகள் மையங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

கோடை விடுமுறை காலங்களுக்கு 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் மைய குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 கிராம் சத்துமாவினை கணக்கிட்டு 24 வேலை நாட்களுக்கு 1,200 கிராம் சத்துமாவாக வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கோடை விடுமுறை தொடங்குவதற்கு முன்னர் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : Anganwadi ,Tamil Nadu ,Chennai ,Social Welfare and Rights ,Jayashree Muralitharan ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது