×

வாலாஜாபாத்தில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரிகளுக்கு ரூ.3.20 லட்சம் அபராதம்: வருவாய் அதிகாரிகள் அதிரடி

வாலாஜாபாத், பிப். 5: வாலாஜாபாத்தில் அதிக பாரம் ஏற்றிச்சென்ற லாரிகளுக்கு வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ரூ.3.20 லட்சம் அபராதம் வசூலித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல், ஆர்ப்பாக்கம், மதுர், மாகறல், இளையநார்வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கட்டுமான பணிகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத், செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு எம்.சாண்ட், ஜல்லி கற்கள், மலைமண் உள்ளிட்டவை கனரக லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் முறையாக தார்ப்பாய் போர்த்தி லாரி ஓட்டுநர்கள் இயக்குவதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில், வாலாஜாபாத் வருவாய் துறையினர் மற்றும் வாலாஜாபாத் போலீசார் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் சென்ற கனரக லாரிகள் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தை நோக்கி சென்ற லாரிகளை நேற்று மடக்கி ஆய்வு செய்தனர். அதில் 8க்கும் மேற்பட்ட லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும், தார்ப்பாய் இன்றி லாரியை இயக்கியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ₹3.20 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் லாரி உரிமையாளர்களிடமும், ஓட்டுநர்களிடமும் லாரியை இயக்கும்போது கண்டிப்பாக அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது, மேலும் தார்ப்பாய் இன்றி செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினர். இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என வருவாய் அலுவலர் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Wallajabad ,Thirumukkudal ,Arpakkam ,Madhur ,Magaral ,Ilaynarvellur ,Kanchipuram ,
× RELATED மாமல்லபுரத்தில் 2 நாட்கள் நடைபெற்ற...