வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஒரு வாரமாக எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்க தற்காலிக போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. அபுதாபியில் 4ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் அமெரிக்கா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில், நேற்றுடன் இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ‘ரஷ்ய அதிபர் புதின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவார தாக்குதலை நிறுத்தி வைப்பதாக புதின் கொடுத்த வாக்கை காப்பாற்றினார்’ என்றார். இந்நிலையில் தற்காலிக ஓய்வுக்குப் பிறகு ரஷ்யா நேற்று உக்ரைன் மீது இந்த ஆண்டின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. சுமார் 450 நீண்ட தூர ட்ரோன்கள் மற்றும் 71 ஏவுகணைகளை வீசி ரஷ்யா ஆவேசத் தாக்குதல் நடத்தியதில், 6 பிராந்தியங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் மின் விநியோக மையங்கள் கடுமையாக சேதமடைந்தன.
தலைநகர் கீவ் நகரில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரியாக குறைந்த நிலையில், தாக்குதல் காரணமாக 1,100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வெப்பமூட்டும் வசதி துண்டிக்கப்பட்டது. கீவ், கார்கிவ், டினிப்ரோ மற்றும் ஒடேசா ஆகிய நகரங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. உக்ரைன் விமானப்படை பதிலடி கொடுத்து 412 ட்ரோன்கள் மற்றும் 38 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே கீவ் நகரில் இருந்தபோதே இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
