புதுடெல்லி: அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் இந்திய பொருளாதாரத்திற்கும், விவசாயிகளுக்கும், ராணுவ தற்சார்பு கொள்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு முதல் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்து கடும் நெருக்கடி கொடுத்து வந்தது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் திருப்பூரைச் சேர்ந்த ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 31 சதவீத இழப்பைச் சந்தித்தனர்.
இந்த இக்கட்டான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, தற்போது இந்தியாவுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவிற்குச் சாதகமான இந்த ஒப்பந்தத்தை ‘அனைத்து ஒப்பந்தங்களின் தந்தை’ என்று டிரம்ப் வர்ணித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியப் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டாலும், அதற்கு ஈடாக இந்தியா மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து ஒரு பேரலுக்கு 24 டாலர் வரை தள்ளுபடி விலையில் கிடைத்து வந்த கச்சா எண்ணெயை இந்தியா இனிமேல் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக அதிக போக்குவரத்துச் செலவு கொண்ட அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளிடம் இருந்து எண்ணெய் மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை வெகுவாகப் பாதிப்பதோடு, எரிபொருள் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பின்படி, சுமார் 500 பில்லியன் டாலர் அதாவது சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வெறும் 41 பில்லியன் டாலர் (ரூ. 3.70 லட்சம் கோடி) மட்டுமே இறக்குமதி செய்த நிலையில், தற்போது அதைவிடப் பல மடங்கு அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்களை அதிக விலைக்கு வாங்கவும், அதன் மூலம் இந்தியாவின் ராணுவ சுயசார்பை இழக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களில் இந்தியா – அமெரிக்கா இடையே பெரும் முரண்பாடுகள் நிலவுகின்றன. ‘இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படும்’ என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினாலும், அமெரிக்காவின் அறிக்கைகள் அதற்கு முரணாக உள்ளன. அமெரிக்க விவசாயத் துறைச் செயலாளர் புரூக் ரோலின்ஸ், ‘அமெரிக்க வேளாண் பொருட்கள் இனிமேல் இந்தியாவின் மிகப்பெரிய சந்தையைக் கைப்பற்றும். இதுவே அமெரிக்க விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி’ என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கியது போல, அமெரிக்காவின் பருப்பு மற்றும் இதர விவசாயப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு வரிச் சலுகை வழங்க முன்வந்துள்ளது இந்திய விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உள்நாட்டு பால்வளம் மற்றும் விவசாயத் துறை கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
மேற்கண்ட புதிய ஒப்பந்த அறிவிப்பால் பங்குச்சந்தை 2,304 புள்ளிகள் உயர்ந்து, ரூபாய் மதிப்பும் 90.15 ஆக உயர்ந்தாலும் இது தற்காலிகமானதே என்று நிபுணர்களால் கூறப்படுகிறது. இந்தியாவின் நலனை விட அமெரிக்காவின் நலனுக்கே இந்த ஒப்பந்தத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்க அதிபருடன் தங்களுக்கு உள்ள நட்பைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறும் ஒன்றிய அரசு, நாட்டின் நீண்டகாலப் பொருளாதார நலனை அடகு வைத்துள்ளது’ என்பதே எதிர்கட்சிகளின் கருத்தாக உள்ளது. போதிய தெளிவான விவரங்கள் இல்லாமல் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்தியத் தொழில்துறையினருக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறுகையில், ‘ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யவும் இந்தியா உறுதி அளித்துள்ளது. போக்குவரத்து, எரிசக்தி மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் சுமார் 500 பில்லியன் டாலர் தொகையை அமெரிக்காவில் முதலீடு செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும்’ என்றார். இதற்கிடையே இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், ‘விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் இந்த ஒப்பந்தத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன’ என்று விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில் எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை என்று ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
