சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை நடுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உரிய அனுமதி பெற வேண்டும் ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாட்டில் புதிய சிலைகள்/கொடி கம்பங்களை நிறுவுவதற்கான செயல்முறை மற்றும் நடைமுறையை தரப்படுத்த நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள சிலைகளை மாற்றுதல் மற்றும் இடமாற்றம் செய்தல் குறித்து விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தனியார் நிலங்களில் புதிய சிலைகள் நிறுவுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், தனியார் நிலங்களில் புதிய கொடிக் கம்பங்கள் நிறுவுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை மாற்றி அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூட்டம், தேர்தல் பிரச்சாரம், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா, விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை அமைப்பது ஆகியவற்றிற்கு 4 வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை மாவட்டத்தில், மண்டல அளவிலான துணைக் குழு அமைக்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டு அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல உதவி ஆணையர் தலைவராகக் கொண்டு ஒரு மண்டலத்திற்கு ஒரு துணைக் குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 15 மண்டல அளவிலான துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தனிநபர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளிடமிருந்தும் புதிய உருவச் சிலைகளை நிறுவுதல் மற்றும் கொடிக்கம்பங்களை அமைத்தல், தற்போதுள்ள உருவச் சிலைகள் மற்றும் கொடிக்கம்பங்களை மாற்றுதல் / இடமாற்றம் செய்தல் மற்றும் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரம், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா, நிகழ்வுகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிகக் கொடிக்கம்பங்களை நடுதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்களைப் பெறலாம் மற்றும் ஆய்வு செய்யலாம்.
கூட்டம், தேர்தல் பிரச்சாரம், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா, விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை அமைப்பதற்கான வழிமுறைகள்: சென்னையை பொறுத்தமட்டில் தனிநபர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள், நிகழ்வின் விவரங்களுடன் தற்காலிகமாக கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கு, நடத்தப்படும் நிகழ்வுக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னதாக, அமைக்கப்பட வேண்டிய தற்காலிக கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை, கொடிக்கம்பங்களின் உயரம், கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிகளுக்குப் பயன்படுத்தப்படும் பொருள், கொடிக்கம்பங்களுக்கு இடையிலான இடைவெளி தூரம், கொடிக்கம்பங்கள் நிறுவப்படும் இடம் / பகுதிகள் உள்ளிட்ட தகவல் உடன் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டல அளவிலான துணைக்குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
தற்காலிக கொடிக்கம்பங்கள் தார்ச்சாலை மேற்பரப்பில், அமைக்கக் கூடாது. சாலையின் உள்ள எந்தவொரு கட்டமைப்புகளின் மீதும் (சாலை மையத்தடுப்பு, நடைபாதை, மழைநீர் வடிகால், கால்வாய், பாலங்கள், சுவர்கள், சாலைதளவாடங்கள் போன்றவை) தற்காலிக கொடிக்கம்பங்கள் வைத்திட அனுமதிக்கப்படாது.தற்காலிக கொடிக்கம்பத்தின் அதிகபட்ச உயரம் தரைமட்டத்திலிருந்து 3.50 மீட்டராக இருக்க வேண்டும். தரைமட்டத்திற்கு கீழே உள்ள ஆழம் ஒரு மீட்டர் (குறைந்தபட்சம்) இருக்கவேண்டும்.தார்ச் சாலையின் மேற்பரப்பில் இருந்து 1.5 மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் துளைகள் துளையிடப்பட வேண்டும். சாலையோரங்களில் அமைக்கும் போது தற்காலிக கொடிக்கம்பங்கள் கண்டிப்பாக மின்சாரம் கடத்தாத வகையில் இருக்க வேண்டும்.
அமைப்பாளர்கள் / விண்ணப்பதாரர்கள் கொடிக்கம்பம் மின்சார கம்பிகளைத் தொடவோ அல்லது குறுக்கிடவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரரே முழுப்பொறுப்பாவார். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களால் ஏற்படும் எந்தவொரு இழப்பையும் விண்ணப்பதாரரே ஏற்கவேண்டும். விபத்துகள் ஏற்பட்டால் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
பொது உள்கட்டமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அனுமதி/உரிமம் பெற்ற நபர், பொது இடங்களை சுத்தம் செய்து, துளைகளை நிரப்புவதன் மூலம் அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கான வாடகையைத் தவிர, சம்பந்தப்பட்ட துறைக்கு சேதத்திற்காக செலுத்த வேண்டிய தொகையையும் சேர்த்து செலுத்த வேண்டும். தற்காலிக கொடிக்கம்பங்களுக்கான வாடகை ஒரு கொடி கம்பத்திற்கு ஒரு நிகழ்விற்கு ரூ.10 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத நிகழ்வுகளைப் பொறுத்தவரை, கொடிக்கம்பங்களை நிறுவுவதற்கு அதிகபட்சமாக ஏழு நாட்கள்அவகாசம் அனுமதிக்கப்படும்.அனுமதி காலம் முடிந்தவுடன், தற்காலிக கொடிக் கம்பங்களை அமைப்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் உடனடியாக அகற்ற வேண்டும். ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் / சம்பந்தப்பட்ட துறையினர் கொடிக்கம்பங்களை அகற்றி, அதற்கான செலவை அமைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கும்.
கொடிக்கம்பங்களை நிறுவும் போது பொதுமக்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், கள சூழ்நிலையைப் பொறுத்து பொருத்தமான முடிவை காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொள்வார்கள். எனவே, எந்த ஒரு நிகழ்வையும் நடத்துவோர் தற்காலிக கொடிக் கம்பங்களை நிறுவுவதற்கு அரசாணையின்படி வழங்கப்பட்டுள்ள மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சென்னை மாவட்டத்தில், மண்டல அளவிலான துணைக் குழுவின் தலைவர் அனுமதி பெற்று கொடிக்கம்பங்களை வைத்து, உரிய நிகழ்விற்குப் பின்னர் அகற்றிட வேண்டும். இதனை மீறி நடப்படும் கொடிக் கம்பங்கள் அலுவலர்களால் அகற்றப்படுவதோடு, இதன் மீது உரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தற்காலிக சிலை, கொடி கம்பம் அமைக்க சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் (http://chennaicorporation.gov.in/) விண்ணப்பிக்க வேண்டும். மதச்சார்பான நிகழ்வுகளுக்கு 7 நாட்களும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு 3 நாட்களும் கொடிக்கம்பங்கள் நடுவதற்கு அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பித்தவுடன் விண்ணப்பம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அளவிலான துணைக் குழுவின் பரிந்துரைக்காக அனுப்பப்படும்.பரிந்துரைகளின் அடிப்படையில் ஆய்வுசெய்து கொடிக்கம்பங்கள் நடுவதற்கான அனுமதி அந்தந்த மண்டலங்களில் உள்ள தலைமைப் பொறுப்பாளரான துணை ஆணையர் (முதுநிலை) வழங்குவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
