ஆவடி: ஆவடி மாநகர பேருந்து நிலையம் அருகே இன்று புதிதாக 2 வழித்தடங்கள் மற்றும் கூடுதல் 3 மாநகர பேருந்து சேவைகளை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆவடி தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆவடி மாநகர பேருந்து நிலையம் அருகே இன்று காலை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், புதிதாக 2 வழித்தடங்கள் மற்றும் கூடுதலாக 3 மாநகர பேருந்து சேவைகளின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, புதிய வழித்தடங்கள் மற்றும் 3 கூடுதல் மாநகர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
பின்னர் மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தி, ஒரு மாநகர பேருந்தில் அமைச்சர் சா.மு.நாசர் நிர்வாகிகளுடன் ஏறி, அனைவருக்கும் டிக்கெட் எடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் மாநகர பேருந்தை இயக்குகிறார்களா என்று அமைச்சர் சா.மு.நாசர் கையில் அணிந்திருந்த வாட்ச் மூலம் நோட்டமிட்டு ஆய்வு நடத்தினார். இன்று ஆவடி மாநகர பேருந்து நிலையத்தில், புதிய வழித்தடம் எண் ஏ54சி எனும் ஒரு மாநகர மினி பேருந்து ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தண்டுரை வழியாக அணைக்கட்டுச்சேரி, அமுதூர்மேடு ஜெ.ஜெ.நகர், திருமணம் ஊராட்சி காவல்சேரி கிராமம், பனிமலர் மருத்துவமனை வழியாக பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகிறது. மற்றொரு புதிய வழித்தடம் எண் எஸ்73டி எனும் மாநகர மினி பேருந்து திருவேற்காடு பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாளகரம். வடநூம்பல், ராஜாங்குப்பம், அயனம்பாக்கம் வழியாக அம்பத்தூர் எஸ்டேட் வரை இயக்கப்படுகிறது.
ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து முருகப்பா பாலிடெக்னிக், தேவி நகர், சிவசக்தி நகர், அண்ணனூர் ரயில் நிலையம், அயப்பாக்கம், அத்திப்பட்டு, வானகரம், மதுரவாயல், நெற்குன்றம் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வரை ஏற்கெனவே இயக்கப்பட்ட தடம் எண்.73கே வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இதேபோல், ஆவடியில் இருந்து புதுவாயல் வரையிலான தடம் எண்.580 வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், ஆவடியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் தடம் எண் 202ஏ வழித்தடத்தில் கூடுதலாக ஒரு மாநகர பேருந்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், மண்டலக்குழு தலைவர்கள் ஜோதிலட்சுமி, அமுதா பேபிசேகர், நகர பொறுப்பாளர் ஜி.நாராயணபிரசாத், ராஜேந்திரன், பொன்.விஜயன், வழக்கறிஞர் வினோத், மாமன்ற உறுப்பினர்கள் கீதாயுவராஜ், சாந்திபாண்டியன், அண்ணாநகர் மண்டல மேலாளர் ஜெயமச்சந்திரன், எல்.பி.எப் தொழிற்சங்கம் தங்கமுருகன், மங்களமன்னன், ஐயப்பன்தாங்கல் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
