மும்பை: சாரா அலி கானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அவரது தாயார் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓரி நிபந்தனை விதித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் நட்சத்திர வாரிசுகளின் நெருங்கிய நண்பராக வலம் வரும் சமூக வலைதளப் பிரபலம் ஓரி என்கிற ஓர்ஹான் அவத்ரமணிக்கும், நடிகை சாரா அலி கானுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகப் பனிப்போர் நிலவி வருகிறது. பொது நிகழ்ச்சிகளில் சாராவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தது மற்றும் இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்வதை நிறுத்தியது போன்ற ஓரியின் நடவடிக்கைகள் பாலிவுட் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தன.
வாட்ஸ்அப் குழு ஒன்றில் ஓரியின் தொழிலை சாரா அலி கான் கிண்டல் செய்ததாகக் கூறப்படும் தகவல் ‘ரெட்டிட்’ தளத்தில் கசிந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மும்பையில் நேற்ற நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓரி, ‘பழைய பகையை மறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்குச் சாரா அலி கானின் தாயார் அம்ரிதா சிங் என்னிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். குழந்தைகளிடம் நான் வன்மத்தை வைத்துக்கொள்வதில்லை. ஆனால் அவர்களைத் தவறாக வளர்த்த பெற்றோர்கள் மீது எனக்குக் கோபம் உள்ளது. சாரா அலி கானின் பேச்சில் நச்சுத்தன்மை உள்ளது’ என்று அவர் குற்றம் சாட்டினார். ஓரியின் இந்தத் திடீர் நிபந்தனையால் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாரா அலி கான் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
