திருவனந்தபுரம்: மும்பை போலீஸ் என்று கூறி கேரள முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக ஆன்லைன் மோசடியும், விர்ச்சுவல் அரெஸ்ட் என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று கேரள முன்னாள் அமைச்சரும், தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ கால் வந்தது.
அதில் போலீஸ் சீருடையில் தோன்றிய ஒருவர், தான் மும்பை போலீஸ் என்றும் உங்களுடைய ஆதாரை பயன்படுத்தி மும்பையில் மோசடி நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் உடனே உங்களது போனில் இருந்து எங்களை அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்து செய்யப்பட்டிருந்தால் அதற்கான எஃப்ஐஆர் எண்ணை தரும்படி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அந்த நபரிடம் கூறினார். ஆனால் அந்த நபர் கொடுத்த எஃப்ஐஆர் எண் போலி என்பதை தெரிந்துகொண்ட திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் பின்னர் பேசுவதாக கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.
அதன் பிறகு அவர் சம்பவம் குறித்து கேரள டிஜிபியிடம் புகார் செய்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சரிடமே மோசடி செய்ய முயற்சித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
