×

ஆற்காடு அருகே கிராம சபை கூட்டம் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும்

*கலெக்டர் சந்திரகலா பேச்சு

ஆற்காடு : 77வது குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அரசு அறிவித்து இருந்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பதுவெட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா கலந்துகொண்டு பேசியதாவது:

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் நடப்பு நிதி ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் குறித்தும் ஊராட்சி செயலாளர் கூறியுள்ளார்.

அதுகுறித்து தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகள், பிரச்னைகள் குறித்தும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். தேவைகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் நிறைவேற்றும் வகையில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும், கோரிக்கைகளுக்கும் வரும் காலங்களில் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கால்வாய் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் யாரேனும் நலத்திட்ட உதவிகள் பெறாமலோ, அடையாள அட்டைகள் வாங்காமலோ விடுபட்டிருந்தால் மாற்றுத்திறனாளி நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்களுக்கு ரேஷன் அட்டை, உதவித்தொகை, பள்ளிகளுக்கு மதில் சுவர் எழுப்புதல், பட்டா மாறுதல் போன்ற ஏதாவது அடிப்படை தேவைகள் இருந்தால் இந்த கூட்டத்தில் மனுக்களாக வழங்குங்கள். ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யாதேவி, ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் மாவட்ட கவுன்சிலர் காந்திமதி பாண்டுரங்கன், மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் குமரன், ஊராட்சி உதவி இயக்குனர் சீனிவாசன், பிடிஓக்கள் அன்பரசன், வெங்கடேசன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Andhad ,Collector ,Chandrakala ,77th Republic Day ,Tamil Nadu ,Ranipettai district ,
× RELATED திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்