×

வாரத்திற்கு 2 நாள் விடுமுறை கோரி வங்கி ஊழியர்கள் இன்று நாடு முழுவதும் ஸ்டிரைக்: சேவைகள் பாதிக்கும்

புதுடெல்லி: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக உடனடியாக அமல்படுத்தக் கோரி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கும். தற்போது வங்கிகள், ஒவ்வொரு மாத்திலும் முதல், 3வது மற்றும் 5வது சனிக்கிழமைகளில் வேலை நாட்களாக இயங்குகின்றன. இதை மாற்றி, அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிறு விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.

இதுதொடர்பாக கடந்த 2024 மார்ச்சில் 12வது இருதரப்பு ஒப்பந்தத்தை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக் கொண்டது. தற்போது இது ஒன்றிய அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறது.இந்நிலையில், 2 ஆண்டாகியும் வாரத்திற்கு 5 நாள் வேலை நாட்களாக அமல்படுத்தப்படாததை கண்டித்து ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். ஏற்கனவே 2 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கப்பட வேண்டுமென்பதால் இந்த வேலை நிறுத்தம் பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தும்.

அதே சமயம், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களில் எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கி ஊழியர்கள் அங்கம் வகிக்காததால், அவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்படாது. யுபிஐ மற்றும் இணைய வங்கிச் சேவை உட்பட டிஜிட்டல் வங்கிச் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.

Tags : New Delhi ,
× RELATED கேதார்நாத், பத்ரிநாத் கோயில்கள்...