×

திருப்பரங்குன்றம் விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்

புது டெல்லி: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு,”வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமில்லாமல், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்றும், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்றலாம். ஆனால் அப்போது பொது மக்களுக்கு அங்கே அனுமதி கிடையாது. அதேப்போன்று பொதுமக்களும் தனிப்பட்ட முறையில் தூணில் தீபம் ஏற்ற கூடாது என்று தெரிவித்திருந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட கேவியட் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதேபோன்று திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து ஒன்றிய அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் ஒன்றிய தொல்லியல் துறை ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் தொடர்பாக ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார், அதில்,’ திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதில் மலை உச்சி தூணில் தீபம் ஏற்ற எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது ஏற்கக் கூடியது கிடையாது எனவே அந்த சரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த புதிய மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thiruparankundram ,Supreme Court ,New Delhi ,G.R. Swaminathan ,
× RELATED திருமண ஆசை காட்டி மோசடி; 10 ஆண்டுகளாக...