×

வெங்காயத்தாள் ரூ.20 முதல் விற்பனை

நாமகிரிப்பேட்டை, ஜன.26: நாமகிரிப்பேட்டை பகுதியில் வெங்காய பயிர் பூத்து குலுங்குகிறது. பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால், வெங்காயத்தாள் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாரச்சந்தை மற்றும் காய்கறி கடைகளில் வெங்காயத்தாளை இல்லத்தரசிகள் ஆர்வமுடன் வாங்கி செல்வதால் விற்பனை சூடு பிடித்துள்ளது. சமையலில் சுவை, ஆரோக்கியம் இரண்டையும் ஒருங்கே தரும் பாரம்பரிய காய்கறிகளுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது மார்க்கெட்டுகளில் வெங்காயத்தாள் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உள்ளூர் காய்கறி சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளில் ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுவதால், இல்லத்தரசிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

வெங்காய பயிரில் இருந்து கிடைக்கும் இந்த தாள், சுவையில் தனித்தன்மை கொண்டதுடன், உடலுக்கு பல மருத்துவ பலன்களை அளிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது. இதனால் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள பெண்கள், வழக்கமான காய்கறிகளுக்கு மாற்றாக வெங்காயத்தாளை தேர்வு செய்து வருகின்றனர். இதனை பொரியல், கூட்டு, வறுவல், சாம்பார் உள்ளிட்ட பல்வேறு சமையல் முறைகளில் பயன்படுத்த முடியும்.

கிராமப்புறங்களில் பாரம்பரிய உணவாக இருந்த இந்த காய்கறி, தற்போது நகர்ப்புற மக்களிடையிலும் பிரபலமாகி வருகிறது. “சுவையும் மென்மையும் அதிகம். எண்ணெய் குறைவாகவே போதும். உடலுக்கும் நல்லது” என சந்தைக்கு வந்த பெண்கள் தெரிவிக்கின்றனர். மற்றொரு பக்கம், வெங்காய பூ விற்பனையால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெங்காயத்தை அறுவடை செய்வதற்கு முன்பே தாள் விற்பனை மூலம் கூடுதல் வருமானம் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பருவநிலை ஏற்றதாக இருப்பதால் தரமான வெங்காயத்தாள் கிடைப்பதும் விற்பனை அதிகரிக்க காரணமாக உள்ளது. வரும் நாட்களிலும் இதன் தேவை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Namakiripettai ,
× RELATED கொங்கண சித்தர் சிலை முன் மதுகுடித்து கும்பல் கும்மாளம்