×

எங்க பிள்ளைக கல்யாணத்த எப்ப நடத்தனும்னு எங்களுக்கு தெரியும்: கூட்டணி குறித்து பிரேமலதா பேட்டி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று காலை 9.30 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  தேர்தல் கூட்டணி குறித்து இப்போது உடனடியாக எதுவும் சொல்ல முடியாது. பொறுத்திருங்கள். நான்காம் கட்ட சுற்றுப்பயணம் தூத்துக்குடியில் இருந்து தொடங்கி வருகிற பிப்ரவரி 3ம் தேதி வரைமேற்கொள்கிறேன்.

எங்கள் கட்சி கூட்டணி அறிவிப்பதில் தாமதம் எதுவும் இல்லை. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. யார் யார் எத்தனை தொகுதி, வேட்பாளர்கள் யார் என்று எந்த கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே இன்னும் கால அவகாசம் உள்ளது. பிப்ரவரி 20ம் தேதிக்கு பின்புதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. தேமுதிக எங்கள் குழந்தைகள். எங்கள் குழந்தைகளுக்கு எப்போது கல்யாணம் செய்ய வேண்டும், எந்த இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது ஒரு அம்மாவாக எனக்கு தெரியும்.

எனக்கு கடமைகள், பொறுப்புகள் அதிகமாக உள்ளன. எனவே உரிய நேரத்தில் எல்லாருமே போற்றும்படி, ஒரு நல்ல கூட்டணியை அமைப்போம் என்பதை உறுதியாக கூறுகிறேன். திமுகவுடன் கூட்டணி சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடப்பதாக, நீங்களாகவே எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. இதுபோன்ற யூகங்களுக்கெல்லாம் பதில் கூறவும் முடியாது.

என்டிஏ கூட்டணியில் இவ்வளவு கட்சிகள்தான் என்று இன்னும் பைனல் ஆகவில்லை. அதேபோல், திமுக கூட்டணியில் இன்னும் இவ்வளவு கட்சிகள் தான் என்பது முடிவாகவில்லை. எனவே எதுவுமே இன்னும் பைனல் வரவில்லை. எனவே எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் மாறலாம்.

யார் யாரும், எந்த கூட்டணியில் வேண்டுமென்றாலும் சேரலாம். அதே நேரத்தில் தேமுதிகவை பொறுத்தமட்டில், நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் விதத்தில் ஆழ்ந்த சிந்தித்து, ஒரு தெளிவான முடிவை நாங்கள் எடுப்போம். இவ்வாறு பிரேமலதா கூறினார்.

* ‘வழக்கு இருப்பதால் மிரட்டி பணிய வைக்கிறாங்க’
புதுக்கோட்டையில் நேற்று பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பிரேமலதா பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருக்கிற பல கட்சிகளின் தலைவர்கள் மீது சிபிஐ வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகள், லஞ்ச ஊழல் வழக்கு என எல்லா வழக்குகளும் உள்ளது.

இதை பயன்படுத்தி ஆட்சியில் இருப்பவர்கள் மிரட்டி பணிய வைக்கின்றனர். தேமுதிக எந்த வழக்குக்கோ எந்த ஊழலுக்கோ எந்த வஞ்சகத்துக்கோ உருட்டல் மிரட்டலுக்கோ அடிபணியாமல் நெஞ்சை நிமிர்த்தி பயணித்துக் கொண்டிருக்கிறது. தேமுதிகவிற்கு உரிய மரியாதை, சீட்டு, உரிய பதவி தருகிற கூட்டணியை தான் அமைப்பேன்’ என்றார்.

Tags : Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,Thoothukudi ,
× RELATED சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய...