சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என் வலியுறுத்தி 2009ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26ம்தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
எனவே, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
