- அன்புமணி
- விழுப்புரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அஇஅதிமுக
- மக்களவைத் தேர்தல்
- பா.ம.க.
- பாஜக
- சிபிஐ
- தைலபுரம்...
விழுப்புரம்: தமிழகத்தில் கடந்த மக்களவை தேர்தலில் கடைசிவரை அதிமுகவிடம் கூட்டணி பேச்சு நடத்திவிட்டு, பின்னர் பாஜவின் மிரட்டலுக்கு அடிபணிந்து அவர்களுடன் பாமக சேர்ந்தது. அன்புமணி மீதான சிபிஐ வழக்கிலிருந்து தப்பிக்கவே இந்த கூட்டணி என்றும், இதற்காக தைலாபுரத்தில் அவசர அவசரமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும் கூறப்பட்டது. அப்போது மக்களவை தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அன்புமணி, அதிமுகவையும் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பாமக இரண்டாக உடைந்துள்ளது. வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அன்புமணி கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். குறிப்பாக கடந்த மக்களவை தேர்தல் பரப்புரையில் அதிமுகவை தாக்கி பேசும் அன்புமணியின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அன்புமணி பேசியதாவது: வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு கேட்டபோது இதே சி.வி சண்முகம்தான் சட்டத்துறை அமைச்சகராக இருந்தார். அவரிடம் நம்முடைய வழக்கறிஞர் பாலு மூலமாக கேட்டுகொண்டிருந்தேன். நீதிமன்றம் வழங்கிய சட்ட டிராப்டை கேட்டபோது நான் பார்த்துகொள்கிறேன் என்றார் சி.வி.சண்முகம். என்னத்தையா பார்த்துகொள்கிறீர்கள். அரைகுறையா ஒன்னுபன்னிட்டு.
அப்ப தெரியாது எங்களுக்கு 10.5 சதவீதம், அப்புறம் 2.5 சதவீதம், 7 சதவீதம் இப்படி மூன்றாக பிரிப்பாங்கன்னு எங்களுக்கு தெரியாது. 10.5, 9 சதவீதம் இருந்திருந்தால் ஒன்னும் பிரச்னை இருந்திருக்காது. அதுமட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரை என்பதை எந்த நீதிமன்றமும் அதனை ரத்து செய்திருக்கமுடியாது. ஆனால் சி.வி சண்முகம் என்ன செய்துவிட்டார், அந்த பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் சேர்மன் பரிந்துரையை அனுப்பிவிட்டார்.
சேர்மன் பரிந்துரையை அனுப்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். நீதிமன்றத்தில் இந்த இடஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்தாங்க என்று தெரியுமா?. கடைசி நிமிடத்தில் ஏன் கொடுத்தீங்க, அரைகுறையாக ஏன் கொடுத்தீங்க. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை இல்லை. அதன்தலைவரின் அறிக்கை இருந்திருக்கிறது. இதையெல்லாம் சொல்லிதான் இடஒதுக்கீட்டை ரத்து பண்ணாங்கன்னு எங்களுக்கு தெரியும். அது அவுங்களுக்கும் தெரியும், நான் கொடுக்கற மாதிரி கொடுப்ப, நீதிமன்றத்தில் அதை ரத்து பண்ணபோறாங்கன்னு.
அது எங்களுக்கு பிரச்னை இல்லை. திட்டமிட்டுதான் பண்ணிருக்காங்க. இதற்கு எடப்பாடி பழனிசாமி நான் கொடுத்தேன்னு பெரிய தியாகி போல பேசினார். அவருடன் கூட்டணி போகலன்னா நாம துரோகி. அவருடன் சென்றால் தியாகி. ஒவ்வொருமுறையும் நாம கூட்டணிக்கு வந்து காவடி பிடிச்சிக்கிட்டு தோளில் தூக்கிக்கொண்டு முதலமைச்சராக்கி அய்யா எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்க அய்யா, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்க அய்யா, இந்த சாராய கடையை மூடுங்க அய்யா, நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுங்க அய்யா என்று கெஞ்சனும்.
இதுதான் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். தற்போது தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த பழைய வீடியோ வைரலாக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
