×

பட்டுநூல் உற்பத்தி அதிகரிக்க அரசு நடவடிக்கை வேண்டும்

*நெசவாளர்கள் கோரிக்கை

காங்கயம் : பட்டுநூல் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை வேண்டும் என பட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காங்கயம் நகரப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுக்கூடங்கள் உள்ளன. இந்த தொழிலை சார்ந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். பட்டு நெசவாளர்களுக்காக 6 கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்த சங்கங்கள் மூலம் நெசவுக்கான ஆர்டர்கள், மானியங்கள் வழங்கப்படும். அதேபோல் ஆண்டுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்கப்படும். மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் பல்வேறு நிதி பயன்கள் இந்த சங்கங்கள் மூலம் நெசவாளர்களுக்கு வழங்கப்படும்.

காங்கேயத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு சங்கங்களில் இரண்டு சங்கங்கள் தவிர மற்ற 4 சங்கங்களும் பட்டுசேலை உற்பத்திக்கான ஆர்டர்களை வழங்குவதில்லை. இதனால் நெசவாளர்கள் தனியாரிடம் ஆர்டர்களை பெற்று சேலைகளை நெய்து தரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பட்டு நெசவு செய்ய ஒரு சேலைக்கு ரூ.1500 முதல் தரத்திற்கு ஏற்ப 3 ஆயிரம் வரை கூலி வழங்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர் இருவர் பணி செய்தால் தான் நெசவு செய்யமுடியும்.

முன்பு சீனாவில் இருந்து பட்டுநூல் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது 10 சதவீதம் அளவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பட்டுவிலை அதிகரித்துள்ளது. ரூ.1500 கூலி தரப்படும் சேலை கடையில் ரூ.5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையும், 3 ஆயிரம் கூலி தரப்படும் சேலைகள் 12 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் பட்டுசேலை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பட்டு நூல் உற்பத்தியை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் விலைகுறையும், மக்கள் வாங்கும் சக்தியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று நெசவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Kangayam ,
× RELATED கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் குழந்தை, பாட்டியுடன் தீக்குளிக்க முயன்ற பெண்