×

திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

*கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலையில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. தாலுகா அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தில், சாரணர் இயக்கத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தை, கலெக்டர் தர்ப்பகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், காந்தி சிலை சந்திப்பு பகுதியில் நிறைவடைந்தது.அதைத்தொடர்ந்து, நேர்மையாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. அப்போது, கலெக்டர் தர்ப்பகராஜ் முன்னிலையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், உறுதி மொழியை ஏற்றனர்.

அதன்படி, மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம் என உறுதி ஏற்றனர்.

நிகழ்ச்சியில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஆர்டிஓ ராஜ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, துணை கலெக்டர் (பயிற்சி) சந்தோஷ்குமார் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்யாறு: செய்யாறு சப்- கலெக்டர் அலுவலகத்தில் 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை சப்- கலெக்டர் அம்பிகா ஜெயின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் காந்தி சாலையில் உள்ள சினிமா தியேட்டர் வரை நடந்தது.

நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அசோக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி, கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடந்தது. இந்த பேரணியை வட்டாட்சியர் வே.இராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன், மண்டல துணை வட்டாட்சியர் சீனுவாசன், தேர்தல் துணை வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர்கள் கோபால், சரிதா மற்றும் இளைநிலை உதவியாளர் கோவிந்தன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுப்பிரமணி, பிரவின்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நேற்று 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தாசில்தார் துரைராஜ் தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சப்- கலெக்டர் அம்பிகா ஜெயின் தலைமையில் தாசில்தார் அகத்தீஸ்வரர், தலைமை இடத்து தாசில்தார் தட்சிணாமூர்த்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் கோமதி, மண்டல துணை தாசில்தார் தரணி குமரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Tags : National Voters Day ,Tiruvannamalai ,Collector ,Dharbagaraj ,Tiruvannamalai… ,
× RELATED நடப்பாண்டில் இரண்டு முறை ஆசிரியர்...