- யூனியன் அரசு
- திருப்பரங்குன்றம்
- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- தொல்பொருளியல் திணைக்களம்
- வழக்கறிஞர்
- ஜெய்சுகி
- இந்து தர்ம பரிஷத்
சென்னை: திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசும், தொல்லியல்துறையும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து தர்மா பரிஷத் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் ஒன்றிய தொல்லியல் துறை கையகப்படுத்தி அதன் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட வேண்டும்.
மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூண் (பழங்கால கல் விளக்கு கம்பம்) உச்சத்தில் தினமும் 24 மணி நேரம் நிரந்தரமாக ஒரு விளக்கை ஏற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் மலை முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான பொதுநல வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளோம். தமிழ்நாடு அரசும் இதே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்று விளக்கமளித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு, தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.
