பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அம்மாநில அரசு விதித்திருந்த தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை ஒப்பந்த வாகனங்களாக பதிவு செய்ய அனுமதி அளித்தும் அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் Ola, Uber, Rapido போன்ற நிறுவனங்கள் மீண்டும் தங்களது சேவையைத் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பைக் டாக்ஸிகளை வணிக ரீதியான வாகனங்களாகப் பதிவு செய்து, முறையான உரிமம் பெற்றுச் சேவையைத் தொடரலாம் என்று பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்தத் தீர்ப்பு ரேபிடோ, உபேர் மற்றும் ஓலா போன்ற ஆப்-அடிப்படையிலான நிறுவனங்களுக்கும், இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்துள்ள நிலையில், மற்றொரு புறம் இது புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்குப் பிறகு, பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. பெங்களூரு போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பைக் டாக்ஸிகள் சிறந்த தீர்வாக இருந்தாலும், அவற்றில் பயணிக்கும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறது. குறிப்பாக, பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பெண் பயணிகளிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகச் சமீபகாலமாகப் பதிவாகியுள்ள பல புகார்கள் இந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.
மேலும், ஓட்டுநர்களின் ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு குறித்த புகார்களும் பெண்களிடையே தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மது போதையில் இருந்த ஓட்டுநர் ஒருவரின் வாகனத்தில் ஏற மறுத்து தனது பயணத்தை ரத்து செய்ததாக இளம்பெண் ஒருவர் பகிர்ந்த அனுபவம், இச்சேவையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, பைக் டாக்ஸி சேவைகளை வெறும் வணிக ரீதியாக மட்டும் பார்க்காமல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான விதிகளைக் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
