×

பெண் அதிகாரியை மிரட்டிய விவகாரம்; காங்கிரஸ் மாஜி எம்பி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

பெங்களூரு: பெண் அரசு அதிகாரியை செல்போன் மூலம் அவதூறாகப் பேசி மிரட்டிய காங்கிரஸ் மாஜி எம்பி மீதான வழக்கை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக மறுத்துவிட்டது.
கடந்த ஜனவரி 12ம் தேதி கர்நாடகா மாநிலம் சிட்லகட்டா நகராட்சி ஆணையர் அம்ருதா, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத பேனர்களை அகற்றினார். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்பி பி.வி.ராஜீவ் கவுடாவின் உருவப்படம் இருந்ததால் ஆத்திரமடைந்த அவர், பெண் அதிகாரி அம்ருதாவை செல்போன் மூலம் தொடர்புகொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், அலுவலகத்திற்குத் தீ வைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த 14ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், ராஜீவ் கவுடா தலைமறைவானார்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, ‘பொதுப்பணியில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியிடம் பேசும்போது கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும்’ என்று கண்டித்தார். மேலும், ‘அரசு ஊழியர்களை மிரட்ட யாருக்கும் உரிமம் கிடையாது’ என்று குறிப்பிட்ட நீதிபதி, ‘பெண் அதிகாரியின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் பேசியதற்காக அவர் மீது கூடுதல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தார். இந்த விவகாரத்தில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ராஜீவ் கவுடாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்ய மாநில காங்கிரஸ் கமிட்டியும் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Majee ,Supreme Court ,Bangalore ,Karnataka High Court ,Maji MP ,Karnataka ,State Municipal Commissioner ,Sitlakata ,
× RELATED இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்புயல்...