சென்னை: கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொங்கு ஈஸ்வரன், அப்துல் சமது, ஏகே செல்வராஜ், அருள், ராஜேஷ் கண்ணா, ராமச்சந்திரன், நாகை மாலிக் ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து அமைச்சர் அனிதா.ராதா கிருஷ்ணன் பேசுகையில், இந்த பிரச்னை கறிக்கோழி வளர்ப்பவர்களுக்கும் நிறுவனத்திற்கும். அவர்களே கூலி மற்ற விஷயங்களை பேசி தீர்த்துக் கொண்டு வந்தார்கள். இதற்கும் அரசுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும், முதல்வர் கவனத்திற்கு சென்றதால் இதுகுறித்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 ஆயிரம் விவசாயிகள் 66 நிறுவனங்களுக்காக கோழி வளர்க்கிறார்கள். ஆண்டுக்கு 50 முதல் 55 கோடி அளவில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பிரச்னை பேசி தீர்க்கப்படும் என கூறினார்.
