×

பத்திரிகைகளுக்கான கட்டணம் அஞ்சலக விதி-2024 கைவிட வலியுறுத்தல்: ஒன்றிய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்

மதுரை: புதிய அஞ்சலக விதிகளை கைவிடக்கோரி ஒன்றிய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து, தனது ‘எக்ஸ்’ தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவின் விடுதலைப் போராட்டமும், ஜனநாயகப் பயணமும் அச்சு ஊடகங்களின் வலிமையால் வடிவமைக்கப்பட்டவை. இந்தச் சூழலில், அண்மையில் அஞ்சலக விதிமுறைகள் 2024 காரணமாக சிறு மற்றும் நடுத்தரப் பதிப்பாளர்கள் சந்திக்கும் கடுமையான சவால்களைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

புதிய வரைமுறை மற்றும் விதிமுறைகளின் படி, ஏழு நாட்கள் வரையிலான கால இடைவெளியில் வெளிவரும் இதழ்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட செய்தித்தாள்களாக கருதப்படுகின்றன. ஏழு நாட்களுக்கு மேல் கால இடைவெளி கொண்ட இதழ்கள் காலமுறை அஞ்சல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, அவற்றுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வந்த அஞ்சல் சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த மாற்றத்தால் 200 கிராம் எடையுள்ள ஓர் இதழுக்கு ஒரு நகலுக்கு ரூ.9 அஞ்சல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முன்னதாக, இதே இதழ் 95 பைசா என்ற சலுகை கட்டணத்தில் அனுப்பப்பட்டு வந்தது. இது ஒரு நகலுக்கு ரூ.8.05 கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. வணிக நோக்கம் இன்றி, பொதுநலன் சார்ந்த இதழியல் நடத்தும் பதிப்பாளர்களால் இந்தச் சுமையைத்தாங்க இயலாது. இவ்வளவு செங்குத்தான கட்டண உயர்வு, இலக்கியம், சமூக சீர்திருத்தம், பொதுக் கொள்கை மற்றும் பிராந்தியப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் இருவார மற்றும் மாத இதழ்களைத் தொடர்ந்து நடத்துவதை பொருளாதார ரீதியாகச் சாத்தியமற்றதாக மாற்றுகிறது.

இவற்றை நலிவடையச் செய்வது, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் நோக்கத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தும். தற்போதைய விதிமுறைகள் நிர்வாகக் காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவை தசாப்தங்களாக சமூக விழிப்புணர்விற்கும் தேசக் கட்டமைப்பிற்கும் பங்களித்து வரும் பல இதழ்களை முடக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளன. எனவே, அஞ்சலக விதிமுறைகள் 2024ஐ மீண்டும் பரிசீலனை செய்து, கால இடைவெளியைப் பொருட்படுத்தாமல் பதிவுசெய்யப்பட்ட அனைத்து இதழ்களுக்கும் மீண்டும் அஞ்சல் சலுகைகளை வழங்க வேண்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Madurai ,Venkatesan ,Union Minister of Information and Communications ,Jyotiraditya Scindia ,India ,
× RELATED சென்னை புத்தக காட்சியில் சுமார் ரூ.9 கோடி வரை புத்தகங்கள் விற்பனை