சென்னை: தவெக ஆலோசனை கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில், அவருடன் மோதலா என்பது குறித்து பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளும் குழு ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை. அதேபோல் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, தவெகவில் இணைந்த செங்கோட்டையனும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையனுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த மோதல் காரணமாகவே அவர் கூட்டத்தை புறக்கணித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‘‘எனக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் என்கிறார்கள். அது உண்மை கிடையாது. கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். விஜய் தலைமையில் நாங்கள் அனைவரும் தொண்டர்கள்தான். சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளிலும் பிரசார கூட்டங்கள் நடைபெறும். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார். இதற்கிடையே தவெக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் வரும் 25ம் தேதி நடைபெறும் என கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தவெக கிறிஸ்துமஸ் விழாவில்தான் கடைசியாக பங்கேற்ற விஜய், இந்த கூட்டத்திலாவது பங்கேற்பாரா என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
