சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பாஜவின் அடித்தளத்தை மேம்படுத்த மண்டல குழு ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தாம்பரம், பல்லாவரம் சட்டமன்ற தொகுதிகளில் நடந்த மண்டல குழு ஆலோசனை கூட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியம் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘36 ஆண்டுகள் நான் பாஜ கட்சியில் நிர்வாகியாக உள்ளேன். ஒருநாளும் நான் கூட்டணி பற்றி பேசியது கிடையாது.
தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி நடத்த உள்ளது. விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளிவராததற்கு ஒன்றிய அரசு காரணம் இல்லை, விஜய் ஒன்றிய அரசை குற்றம் சாட்டவும் இல்லை. நாங்கள் ஒன்றும் அதற்கு குறுக்க நிற்கவில்லை. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை குழு இன்னும் அனுமதி தரவில்லை. தணிக்கை குழுவிடுமே இவர்கள் முறையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் அதற்கு தீர்வு வந்திருக்கும். எனது நடிப்பில் வெளிவந்த கந்தன் மலை படம் வெளிவந்து ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
