சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் காலை, மாலை என ஜெட் வேகத்தில் பவுனுக்கு ரூ.3600 அதிகரித்தது. இதன் மூலம் தங்கம் பவுன் ரூ.1 லட்சத்து 11,200 புதிய வரலாற்று உச்சம் கண்டது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.22 ஆயிரம் அதிகரித்தது. விலை உயர்வால் கடைகளில் நகை விற்பனையும் பாதியாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.நேற்றும் தங்கம், வெள்ளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,610க்கும், பவுனுக்கு ரூ.1,280 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1,08,880க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ஒரு கிராம் ரூ.330க்கும், கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்து, பார் வெள்ளி ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்றது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மாலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13900க்கும், பவுனுக்கு ரூ.2320 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.3,40,000க்கும் விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3600 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,200 என்ற வரலாற்று உச்சத்தையும் தொட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெள்ளியும் காலை, மாலை என ஒரே நாளில் ரூ.22,000 வரை உயர்ந்து வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: சர்வதேச அளவில் தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய டிமாண்ட் தான் விலை உயர்வுக்கு காரணம். தங்கம் விலை உயர்வால் விற்பனை 50 சதவீதம் அளவிற்கு தான் நடைபெற்று வருகிறது. இதேபோல விலை உயர்வால், வெள்ளியும் விற்பனை குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
