×

கிரீன்லாந்தை வாங்க டிரம்ப் கடும் மிரட்டல்; விண்வெளி தளத்தில் விமானத்தை இறக்கிய அமெரிக்கா: சர்வதேச அரசியலில் பெரும் பதற்றம்

வாஷிங்டன்: கிரீன்லாந்தை வாங்கும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கெடு விதித்துள்ள நிலையில், அங்கு ராணுவ விமானம் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து பகுதியை விலைக்கு வாங்க நீண்ட நாட்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார். சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் என்று அவர் கூறி வருகிறார். ஆனால், இதற்கு டென்மார்க் அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், ‘கிரீன்லாந்தை விற்காவிட்டால் டென்மார்க் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் 10 சதவீதமும், ஜூன் 1ம் தேதி முதல் 25 சதவீதமும் வரி உயர்த்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கிரீன்லாந்தில் உள்ள பிடுஃபிக் விண்வெளி தளத்திற்கு வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புப் படைக்கு (நோராட்) சொந்தமான விமானத்தை அமெரிக்கா தற்போது அனுப்பியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நோராட் அமைப்பு வெளியிட்ட பதிவில், ‘நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த விமானம் அங்கு அனுப்பப்பட்டுள்ளது’

என்றும், ‘டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசுகளின் முழு ஒப்புதலுடனேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையாக இது இருந்தாலும், டிரம்ப் விதித்துள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில், அங்கு அமெரிக்க விமானம் தரையிறங்கியுள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Tags : Trump ,Greenland ,United ,States ,Washington ,US ,President ,President Trump ,Denmark ,
× RELATED பிரதமர் மோடி முன்னிலையில் பாஜக தேசிய தலைவராக பதவியேற்றார் நிதின் நபின்!!