அரியலூர், ஜன.20: அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதையடுத்து வழக்கறிஞர்கள் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அரியலூரில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் என பல்வேறு நீதிமன்றங்கள் பேருந்து நிலையம் அருகே, அண்ணா சிலை அருகே, பெருமாள் கோயில் தெரு, கல்லூரி சாலை என பல்வேறு இடங்களிலும் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இதில், சில நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது.எனவே, அனைத்து நீதிமன்றங்களையும் ஒரு இடத்தில் கொண்டுவர ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட வேண்டும் என வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2024 நவம்பர் மாதம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூரில் விரைவில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் ஜன.14-ம் தேதி அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட ரூ.101.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதனை வரவேற்கும் வகையில், பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு வந்த வழக்கறிஞர்கள், அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்று கூடி அரசு வழக்கறிஞர்கள் கதிரவன் , ராஜா , சின்னத்தம்பி தலைமையில் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ராஜசேகர் , பரமேஸ்வரன் , விஜி மற்றும் வழக்கறிஞர் பலர் உடன் இருந்தனர்.
