×

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை: வேலூருக்கு வரும் 22-ஆம் தேதி வருகை

வேலூர்: ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் ‘ஆதியோகி ரத யாத்திரை’ தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை வேலூர் மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 22 மற்றும் 23 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (19/01/2026) நடைபெற்றது. இதில் ரத்தினகிரி அலங்கார் உரிமையாளர் வேலூர் ஒருங்கிணைப்பாளர் R.வெங்கடசுப்பு பங்கேற்று பேசினார். அவருடன் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் சொக்கலிங்கம், சரவணன், மணிவண்ணன் சதீஷ் மற்றும் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆதியோகி ரத யாத்திரை
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது.

ஆதீனங்களின் அருளாசியோடு…
தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.

தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.

பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!
இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக வேலூரை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் அமைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வேலூரில்…
அதன்படி வரும் ஜன 22, 23 ஆகிய 2 நாட்கள், வேலூர் மாநகரப் பகுதிகளான கருகம்பத்தூர், கொணவட்டம், பொய்கை, அரியூர், தொரப்பாடி, அடுக்கம்பாறை, சாய்நாதபுரம், சங்கரன்பாளையம், வேலப்பாடி, காந்திசிலை, மண்டித்தெரு, சத்துவாச்சேரி, காட்பாடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை நடைபெற உள்ளது.

வேலூரை அடுத்து குடியாத்தம், கே.வி.குப்பம் வழியாக பயணித்து ஜன.25-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றடைய உள்ளது. அடுத்து ஆற்காடு, செஞ்சி வழியாகப் பயணித்து ஜன.29-ஆம் தேதி திருவண்ணாமலை சென்றடையும் ரதம் அதன் பின்பு திண்டிவனம், புதுச்சேரி மற்றும் வில்லியனூர் பகுதிகளில் தொடர உள்ளது.

வேலூரில் மஹாசிவராத்திரி விழா
கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் வேலூரில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள தண்டபாணி முதலியார் மஹாலில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது.

ஆதியோகி ரதம்
ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

சிவ யாத்திரை
இதனுடன், ‘சிவ யாத்திரை’ எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

Tags : Adiyogi Ratha Yatra ,Isha Mahashivratri ,Vellore ,Isha Mahasivratri festival ,Adiyogi Ratha Yathri ,Tamil Nadu ,South Kailaya Devotees ,Vellore Managar ,
× RELATED பாமகவுக்கு உரிமை கோரி அக்கட்சி...