×

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

 

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப்பத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான விழா திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது உற்சவர் சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பை புல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை 7 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. விழாவினையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்கமயில் வாகனம், அன்ன வாகனம், பச்சை குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 27 ஆம் தேதி தேதி தைக்கார்த்திகை தினத்தில் தெப்பம் முட் டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 16 கால்மண்டபம் வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய ரத வீதிகளில் தேரோட்டமும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 28 ஆம் தேதி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை தெப்ப மிதவையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பகுளத்தை வலம் வந்து அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து அன்று இரவு தெப்பக்குளத்தில் மைய மண்டபத்தில் பத்தி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து மின்னொளியில் மீண்டும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி தெப்பக்குளத்தை வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ. சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மத்தேவன், ராமையா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 

Tags : Thepbat ,Thirupparangundaram ,Thirupparangunram ,Theppath festival ,Subramaniya Swami Temple ,Thiruparangundaram ,Subramaniya ,Swami Temple ,Murugan ,
× RELATED காஸா அமைதிக் குழுவில் இணைய பிரதமர்...