மதுரை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இப்போ ஹாட் டாப்பிக்காக மாறி உள்ள ‘லாட்டரி பேமிலி’. இதற்கு காரணமா, கூலி தொழிலாளியாக தொடங்கிய வாழ்க்கை இன்று சர்வதேச லாட்டரி அதிபராக மாறி இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கும் அளவுக்கு உயர்ந்து உள்ள மார்ட்டின்தான். கோவையை சேர்ந்த இவர், இன்று பல்வேறு தொழில்களில் கால் பதித்து உள்ளார். லாட்டரி, ஆன்லைன் கேமிங் போன்ற தொழிலில் பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்ததாக மார்ட்டின் குடும்பத்தினர் மீது சிபிஐ, ஈடி, ஐடி போன்ற அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து சொத்துகளை முடக்கி உள்ளது.
தங்களது தொழிலை பாதுகாக்க மார்ட்டின் குடும்பத்தினர் ஆளுக்கு ஒரு அரசியல் கட்சியில் ஐக்கியமாகி உள்ளனர். மார்ட்டினின் மனைவி பாஜ கூட்டணியில் உள்ள ஐஜேகேவில் மாநில பொறுப்பில் உள்ளார். மருமகன் ஆதவ் ஆர்ஜூனா தவெகவில் மாநில பொறுப்பில் உள்ளார். மகன் ஜோஸ் சார்லஸ், புதுச்சேரியில் சிஎம் கனவுடன் லட்சிய ஜனநாயக கட்சி தொடங்கி அரசியல் செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் லாட்டரி தொழிலில் கிடைத்த பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகின்றனர். புதுச்சேரியில் புதுக்கட்சி தொடங்கி ஆளும் பாஜ கூட்டணி அரசுக்கு குடைச்சல் கொடுத்த சார்லசை, அமித்ஷா அழைத்து கடுமையாக எச்சரித்து, ‘ஒன்னு கட்சிய கலைச்சுடு… இல்லைன்னா கூட்டணியில் சேரு’ என மிரட்டல் விடுத்து உள்ளார்.
இந்த சூழலில், மார்டடின் மனைவி லீமா ரோஸ், லாட்டரி பணம் மூலம் திருவாடானை தொகுதியில் அதிமுகவில் சீட் கேட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் ஒன்று திருவாடானை. இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரு.மாணிக்கம் உள்ளார். இவருக்கு முன் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக நடிகர் கருணாஸ் இருந்தார். திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளில் இன்னும் உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக துவங்காத நிலையில், பல்வேறு கட்சியினரும் அதற்காக காய் நகர்த்தி வருகின்றனர். சிலர் துண்டு போட்டு புக்கிங் செய்யும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.
பலமுறை தேர்தலில் தானும், தனது மனைவி கீர்த்திகாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டாலும் எம்எல்ஏ மற்றும் எம்பி கனவு நிறைவேறாத கதையாகவே உள்ளதாக அதிமுக மாவட்டச் செயலாளர் முனியசாமி புலம்பி வருகிறார். இந்த முறை எப்படியாவது திருவாடானை தொகுதியில் சீட் வாங்கி, சட்டமன்ற உறுப்பினராகிவிட வேண்டுமென்ற லட்சியத்தில் களப்பணியில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளார். இதற்கு தோதாக தனக்கு வேண்டப்பட்ட பலரை புதிய நிர்வாகிகளாக நியமித்து, தொகுதிக்குள் தனக்காக வேலை பார்க்க ஆட்களை தயார் செய்து வைத்து வருகிறார். இதே தொகுதிக்கு அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஆனிமுத்துவும் குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார். இருவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரபல லாட்டரி மன்னன் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்ட்டின், குடும்ப பாதுகாப்பு காரணங்களுக்காக பாஜ கூட்டணியில் உள்ள ஐஜேகேவில் இருக்கிறார். அந்த கட்சியில் இவரை யாரும் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எப்படியாவது எம்எல்ஏ ஆகிவிட வேண்டுமென்ற ஆசை இவரையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கட்சி மாறவும் திட்டமிட்டுள்ளார். தேர்தலில் பணத்தை தண்ணீராய் செலவிடும் ஆட்களை அதிமுக வேட்பாளர்களாக்க எடப்பாடி தேடி வந்த நிலையில் லீமா ரோஸ் சிக்கியுள்ளார். அவர் சமீபத்தில் எடப்பாடியை நேரில் சந்தித்து, திருவாடானை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். நீங்கள் ஓகே சொன்னால் கட்சியில் இணைகிறேன் என தெரிவித்து உள்ளார்.
அப்போது எடப்பாடி, ‘ஏம்மா அந்த தொகுதி கேட்கிறீங்க’ என திருப்பி கேட்க, ‘திருவாடானை தான் எனக்கு சொந்த ஊர். எனது உறவினர்களும், சமுதாயத்தினரும் குறிப்பிட்ட அளவிற்கு உள்ளனர்.
இவர்கள் பலத்துடன், பணத்தை வைத்து தொகுதியை என் வசம் ஆக்கிவிடுவேன்’ என கூறியதைக் கேட்டு ஒரு கணம் எடப்பாடி ஆடிப் போனாராம். இப்படிப்பட்ட ஆளைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். வாங்க ஒரு கை பார்க்கலாம் என அவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதுபோல் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கட்சியினர் மத்தியில் கசிய, இந்த தொகுதிக்காக துண்டு போட்டு வைத்திருந்த மாவட்டச் செயலாளர் முனியசாமியும், மாஜி எம்எல்ஏ ஆனிமுத்தும் உண்மையில் ரொம்பவே அப்செட்டாகி விட்டார்களாம். ஒரு நொடிப் பொழுதில் பணத்தை வைத்து அதிமுகவினர் அத்தனை பேரின் வாயையும் பிளக்க வைத்துள்ளார் லீமா ரோஸ் மார்ட்டின் என்கின்றனர் விபரம் அறிந்த அரசியல் ஆர்வலர்கள்.
