×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் நாளை வெளியீடு..!

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஏப்ரல் மாதம் தரிசிப்பதற்கான பல்வேறு சேவை டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் வெளியாக உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளுக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவா உள்ளிட்டவை நாளை (19ம் தேதி) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த சேவை டிக்கெட்டுகளை ஜனவரி 21ம்தேதி காலை 10 மணி வரை மின்னணு குலுக்கல் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 21 முதல் 23ம்தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி டிக்கெட்டுகள் பெறலாம்.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வரும் 22ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். இதேசேவைக்கு நேரில் பங்கேற்காமல் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். அங்கபிரதட்சனம் செய்வதற்கான டோக்கன்கள் 23ம்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

வாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்து சுவாமி தரிசன டிக்கெட்டுகள் 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் 24ம்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகும். திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் பெற 24ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மார்ச் மாதத்திற்கு ஸ்ரீவாரி சேவா, பரக்காமணி உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கான சேவைக்கு 27ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். எனவே சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

24 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 83,576 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,173 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.07 கோடி காணிக்கை கிடைத்துள்ளது. கடந்த 5 நாட்களாக பொங்கல் விடுமுறை என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே உள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. இதனால் சுமார் 3 கி.மீ. தூரம் வெளியே நீண்ட வரிசையில் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கின்றனர். இவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய சுமார் 24 மணி நேரமாகும் என தெரிகிறது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 9 மணி நேரத்திலும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

Tags : Tirupathi Eumalayan Temple ,Thirumalai ,Tirupathi Elumalayan ,Tirupathi Elumalayan Temple Devasthanam ,Subrapadam ,Arjita Seva ,
× RELATED போலி வாக்காளர் சேர்ப்பு விவகாரத்தில்...