×

நாமக்கல், திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அரசியல் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ்: திடீரென குறுக்கிட்ட விழா கமிட்டி நிர்வாகியால் பரபரப்பு

 

நாமக்கல்: திருச்செங்கோட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பரிசளிக்க வந்த தவெக கொள்கை பரபரப்பு செயலாளர் அருண்ராஜ் அரசியல் குறித்து பேசியதும் திடீரென குறுக்கிட்ட விழா கமிட்டி நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. “இந்த மேடைக்கு தலைவர் நான் தான். பொங்கல் பத்தி மட்டும் பேசுங்க. உங்கள் அரசியல் பேச கூடாது. அதற்கென தனி மேடை போட்டு பேசுங்க” எனக் கூறினார்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக வெற்றி கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வருகை தந்திருந்தார். அப்போது, திருச்செங்கோடு 11-வது வார்டு சின்னப்பாவடி பகுதியில் சின்னப்பாவடி டெக்கரேஷன் கிளப் அங்கு மெமோரியல் கிரிக்கெட் கிளப் ஆகியவை இணைந்து நடத்திய பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியான அருண்ராஜ் பரிசுகளை வழங்கினார்.

அப்போது, மேடையில் விஜய் குறித்தும், விஜய்யை வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் எனவும் பேசினார். தொடர்ந்து, ‘உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும்?, அரசு மருத்துவமனைகளுக்கு சென்றிருக்கிறீர்களா?, அங்கு உள்ள கழிப்பிடங்களை பயன்படுத்தி இருக்கிறீர்களா? என பொதுமக்களிடம் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட சின்ன பாவடி பொங்கல் விழா குழு நிர்வாகி தனசேகர் என்பவர், ‘பொங்கல் விழாவிற்கு வந்தால் பொங்கலை பற்றி மட்டும் பேசுங்கள். வேறு எதுவும் அரசியல் பேசக்கூடாது. அதற்கென்ன தனி மேடை போடுங்கள், பேசுங்கள். இங்கு பேச வேண்டாம். பொதுவான நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உங்கள் கட்சி அரசியலை இங்கு பேச வேண்டாம்’ என்றார். இவ்வாறு அவர் குறுக்கிட்டு பேசியதால் தனது பேச்சை பாதியில் அருண்ராஜ் நிறுத்திக்கொண்டார். தொடர்ந்து, பொங்கல் விழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி பேச்சை முடித்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டார்.

பொது மேடையில் அருண் ராஜை அரசியல் பேசக்கூடாது என அங்கிருந்தோர் தடுத்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தவெக சார்பில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ்தான் போட்டியிட இருப்பதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் அவர் திருச்செங்கோடு பகுதியில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

Tags : Pongal Festival ,Namakkal, Trichenkot ,Arunraj ,NAMAKKAL ,CEREMONY COMMITTEE ,SECRETARY OF STATE POLICY AGITATION ,THIRUCHENGKOT ,Pongal Pathi ,
× RELATED தமிழ்நாட்டில் அனைத்து...