×

திருக்குறள் வாரத்தை முன்னிட்டு மெரினாவில் இசை நிகழ்ச்சி: இன்று மாலை நடக்கிறது

 

சென்னை: திருக்குறள் வாரத்தை முன்னிட்டு, திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் “திருக்குறள் வாரம்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் கடந்த ஆண்டு 31.12.2024 அன்று குமரிமுனை வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்வின் போது அறிவித்திருந்தார்.

அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திருக்குறள் குறளாசிரியர் மாநாடு, அரசு அலுவலர்களுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான திருக்குறள் போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவியருக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், திருக்குறள் நாட்டிய நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையில் திருக்குறள் மற்றும் பழந்தமிழ் இலக்கியங்களை மையமாகக் கொண்ட இசை நிகழ்ச்சி இன்று மாலை நடத்தப்பட உள்ளது.

இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் முயற்சியால் கடந்த பல ஆண்டுகளாக திட்டமிட்டு இசையமைக்கப்பட்ட திருக்குறளும், தமிழ் இலக்கிய பாடல்களும் இசை வடிவில் மக்கள் ரசிக்கும் வகையில் கொண்டாட்ட இசையாக மாலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியும், 6 மணி முதல் 6.30 மணி வரை திரைப்பட நடிகை சுஹாசினியின் “என் சென்னை” நிகழ்ச்சி நடத்தப்படும்.

இந்த இசை நிகழ்ச்சி இன்று (18ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சென்னை மெரினா கடற்கரையில் எல்லோரும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Marina ,Thirukkural week ,Chennai ,Chennai Marina beach ,Chennai Corporation ,Thirukkural… ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில்...