சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் அரசுப் பள்ளிகளுக்கான 2ம் கட்ட மானியம் அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: ஒன்றியகல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2025-26ம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்தது. அதில் முதல்கட்டமாக 50 சதவீத தொகை ரூ.97.95 கோடி அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 2ம் கட்ட மானியமும் தற்போது அனைத்து மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பள்ளிகளில் தூய்மைப் பணிகள், கட்டிட பராமரிப்பு போன்றவற்றுக்காக செலவிட வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய காலத்துக்குள் மானியத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், செலவீன அறிக்கையை பயன்பாட்டுச் சான்றிதழுடன் இணைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
