நியூயார்க்: “இந்தியா – பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் 81வது முறையாக கூறி உள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. 4 நாள்கள் நீடித்த இந்த போரை வர்த்தகத்தை காரணம் காட்டி, மிரட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். மேலும் 8க்கும் மேற்பட்ட போர்களை தடுத்து நிறுத்திய தனக்கு 2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வௌிப்படையாக கேட்டு வந்தார். ஆனால், 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. மரியா கொரினா மச்சாடோ தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை கடந்த வியாழக்கிழமை(ஜன.15) அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் வழங்கியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் பேசி உள்ளார். நேற்று முன்தினம்(ஜன.16) புனோரிடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டிரம்ப், “அமெரிக்கா ஒரு வருடத்துக்குள் 8 சமாதான உடன்படிக்கைகளை செய்துள்ளோம். காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டோம். மத்திய கிழக்கு நாடுகளிலும் அமைதி நிலவுகிறது. இரண்டு அணு ஆயுத பலம் பொருந்திய அண்டை நாடுகளான இந்தியா – பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன். இந்த போரை நிறுத்தியதன் மூலம் பல கோடி பேரை நான் காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டியது எனக்கு சிறந்த கவுரவம்” என தெரிவித்தார்.
