×

பொங்கல் பண்டிகையையொட்டி இரண்டு நாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை: சென்னை மண்டலம் விற்பனையில் முதலிடம்; டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 3,240 டாஸ்மாக் கடைகளில் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெறும். சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் விற்பனை கூடுதலாக இருக்கும். மேலும், தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் கணிசமான விற்பனை என்பது அதிகரிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகின்றன. அந்தவகையில் இந்தாண்டு புத்தாண்டு தினத்தன்று டிச.31 மற்றும் ஜன 1 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் ரூ.400 கோடிக்கு மது விற்பனையாகின. இந்த நிலையில், போகி பண்டிகை மற்றும் தை பொங்கல் ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் ரூ.518 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்தாண்டு ஜன.14ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 14ம் தேதி போகி பண்டிகையின் போது ரூ.217 கோடியும், பொங்கல் பண்டிகையின் போது ரூ.301 கோடியும் என இரண்டு நாட்களுக்கு ரூ.518 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டுள்ளன. சென்னை மண்டலம் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளன. அதன்படி, சென்னை ரூ.98.75 கோடி, மதுரை – 95.87 கோடி, திருச்சி – ரூ.85.13 கோடி, சேலம் – ரூ.79.59 கோடி, கோவை – ரூ.76.02 கோடி என தமிழகம் முழுவதும் டாஸ்மாக் விற்பனை அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளை தவிர்த்து உரிமம் பெற்ற பார்கள் மூலம் வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளன. இதன் மூலம் ரூ.83 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன.

இந்த வருவாய் அதிகரிப்பின் மற்றொரு காரணம், பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் என்பதால், டாஸ்மாக் கடைகள் அன்றைய தினம் மூடப்படும். இதனால் பெரும்பாலனோர் பொங்கல் அன்றே மது வாங்கி வைத்தால் விற்பனை சற்று அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜன.13, 14, 16 ஆகிய 3 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதில், பொங்கல் சமயடத்தில் இரண்டு நாட்களில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.454 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. அதனுடன் ஒப்பிடுகையில் இருந்தாண்டு ரூ.64 கோடி வரை கூடுதல் வருமானம் மது விற்பனை மூலம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Pongal festival ,Chennai ,TASMAC ,Tamil Nadu ,
× RELATED துபாயில் நடந்த கார் பந்தயத்தில்...