- பூட்டான்
- நெகிழ்ச்சி
- கோவில்பட்டி
- கோவில்பட்டி
- பொட்டிகி
- புதைஸ்யூனா
- கருப்புசாமி
- கிருஷ்ணம்மாள்
- கிளவிபட்டி கிராமம்
- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பேரன் பேத்திகள், பூட்டன், பூட்டிகள் புடைசூழ தனது 100வது பிறந்தநாளை கொண்டாடிய பாட்டியை கிராம மக்கள் வாழ்த்தினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிளவிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி – கிருஷ்ணம்மாள் தம்பதிக்கு மொத்தம் 5 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மகன்கள், மகள்கள் மூலமாக மொத்தம் 20 பேரன், பேத்திகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி 24 பூட்டன் – பூட்டிகள் உள்ளனர். அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு துறையில் கருப்பசாமி – கிருஷ்ணம்மாள் வாரிசுகள் பணிபுரிந்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி இறந்துவிட்டார். இந்நிலையில் 4 தலைமுறைகளை கண்ட கிருஷ்ணம்மாள் நேற்று தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் அவரது பிள்ளைகள், உறவினர்கள், பேரன், பேத்திகள், பூட்டன் – பூட்டிகள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாடி மூதாட்டிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றனர். மேலும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மூதாட்டி கிருஷ்ணம்மாளுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணம்மாளின் பேரன், பேத்திகள் கூறுகையில், “எங்களுக்கு எவ்வளவு சொந்தம் இருக்கிறது என்பதை எங்கள் பாட்டியின் பிறந்தநாள் எடுத்துக்காட்டியது. எங்களுடைய உறவுகளையும் ரத்த சொந்தங்களையும் இதன் மூலமாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு சொந்தங்களும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்த நிலையில் பாட்டியின் பிறந்தநாள் விழாவில் ஒருங்கிணையை வேண்டும் என்று நினைத்தோம். அது சாத்தியமாகி உள்ளது. நான்கு தலைமுறை கண்ட எங்கள் பாட்டி அடுத்ததாக எங்களுடைய ஐந்தாவது தலைமுறையையும் காண தயாராகி இருப்பதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
