×

மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு குடிபோதையில் பைக்கில் ஊருக்கு செல்லும்போது விபத்தில் சிக்கி தந்தை, மகள் காயம்: செங்கல்பட்டு ஜி.ஹெச்சில் டாக்டர்களுடன் தகராறு

செங்கல்பட்டு: விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. சென்னை வேளச்சேரி அடுத்த சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், மாணிக்கம் தினமும் குடித்துவிட்டுவந்து குடும்பத்தில் பிரச்னை செய்துள்ளார். இதனால் அவர் குடியை மறக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட
குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்லவேண்டும் என்று மாணிக்கம் தெரிவித்துள்ளார். இதற்கு மனைவி, ‘‘ஊருக்கு சென்றுவிட்டு உடனடியாக வரமுடியாது. 2 பேரும் வேலைக்கு செல்லவேண்டும். எனவே ஊருக்கு செல்லவேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் பொங்கல் அன்று தொடர்ந்து மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே குழந்தை அதிதியை பைக்கில் ஏற்றிக்கொண்டு, ‘’நாங்கள் ஊருக்கு போகிறோம்’’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். கடும் போதையில் அவர் இருந்ததால் பிரச்னை எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அமுதா உடனடியாக கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில், மதுராந்தாகம் அருகே மாணிக்கம் போதையில் தடுமாறியதால் கட்டுப்பாட்டை இழந்த பைக் விபத்தில் சிக்கியது. இதில் காயம் அடைந்த மாணிக்கம், குழந்தை அதிதி ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணிக்கம் போதையில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவிடாமல் மருத்துவர்கள், செவிலியர்களிடம் தகராறில் ஈடுபட்டதுடன் குழந்தையை அவர்களிடம் இருந்து பறித்துக்கொண்டு மீண்டும் திண்டிவனம் புறப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து கொடுக்கப்பட்ட தகவல்படி, செங்கல்பட்டு நகர உதவி காவல் ஆய்வாளர் செல்வகணேஷ் தலைமையில் போலீசார் வந்து மாணிக்கத்தை சமாதானப்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அமுதாவுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து குழந்தை அதிதியை அவரிடம் ஒப்படைத்தனர்.

Tags : Chengalpattu ,Manickam ,Omandur ,Villupuram district ,Amudha ,Adithi ,Chennai… ,
× RELATED காணும் பொங்கலையொட்டி சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு