×

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: சென்னை ரயில்வே கோட்டம் நடவடிக்கை

 

சென்னை: பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியை சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான பயணச் சூழலை வழங்கும் வகையில், ரயில் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவும் பணியை சென்னை கோட்டம் தற்போது விரிவுபடுத்தி வருகிறது.

சென்னை கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில், சென்னை கடற்கரை – தாம்பரம் புறநகர் பிரிவு மற்றும் அனைத்து பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்) நிலையங்கள் உட்பட 59 முக்கிய ரயில் நிலையங்களில் ஏற்கனவே சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.பயணிகளின் நலனை மேலும் மேம்படுத்தும் வகையில், மேலும் 82 ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இது பரபரப்பான புறநகர் நிலையங்கள் மற்றும் சிறிய ரயில் நிறுத்தங்கள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பயணிகள் எங்கு ஏறினாலும் அல்லது இறங்கினாலும் அவர்கள் பாதுகாப்பை உணர்வதை இது உறுதி செய்கிறது.

* சிசிடிவி நிறுவும் பணிகள் நடைபெறும் இடங்கள்:

சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி பிரிவு: தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, வ.உ.சி நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரைப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி.

சென்ட்ரல் – ஜோலார்பேட்டை மற்றும் சென்னை – அரக்கோணம் பிரிவுகள்: வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், வேப்பம்பட்டு, ஏகாட்டூர், கடம்பத்தூர், செஞ்சிபனம்பாக்கம், மணவூர், திருவாலங்காடு, மொசூர் மற்றும் புளியமங்கலம். இதுதவிர, பொன்னேரி, கவரைப்பேட்டை, மீஞ்சூர், பட்டாபிராம், திருநின்றவூர், அத்திப்பட்டு, எண்ணூர், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, எளாவூர், ஆரம்பாக்கம், திருத்தணி, வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர் மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட 19 ஆபத்துள்ள இடங்கள் மற்றும் முக்கியமான கடக்கும் இடங்கள் ஏற்கனவே சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் நடைமேடைகள், நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், பயணச்சீட்டு அலுவலகங்கள், நடைமேம்பாலங்கள் மற்றும் பயணிகள் கூடும் இடங்களைக் கண்காணிக்கின்றன. இதன் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவசர காலங்களில் விரைந்து செயல்படவும், கூட்ட நெரிசலைத் திறம்படக் கையாளவும், பயணிகளுக்குத் தேவைப்படும்போது உதவவும் முடிகிறது, என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Chennai Railway Station ,Chennai Kotham ,Southern Railway ,
× RELATED ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான மழை!