பேராவூரணி, ஜன.10: பேராவூரணி அருகே கதண்டு கடித்த 12 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சி சீவன்குறிச்சி கிராமத்தில் சாலையோரம் உள்ள மாமரம் ஒன்றில் விஷவண்டான கதண்டு கூடு கட்டியிருந்துள்ளது. நேற்று காலை வீசிய காற்றில் மரத்திலிருந்து கீழே விழுந்த கூட்டிலிருந்த விஷ வண்டுகள் சீவன்குறிச்சி தெருக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் பறந்து சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் வீட்டிலிருந்தவர்களை துரத்தி சென்று கடித்தது.
இதில் தாமோதரன் (50), ராமதாஸ் (65), நீலகண்டன் (65), கணேசன் (60), மஞ்சுளா (55), ஆனந்தன் (60), பாலகிருஷ்ணன் (70), கலைச்செல்வி (70), செல்வி (50), ரமேஷ் (55), மணிகண்டன் (35) ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
