நாகர்கோவில், ஜன. 10 : குமரியில் உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கருத்துக்கள், கோரிக்கைகளை அறிய 1,057 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குட்பட்ட 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கருத்துக்கள், கோரிக்கைகள், ஆசைகளை கேட்டறியும் வகையில் உங்கள் கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு என தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் வீடு, வீடாக சென்று குடும்பங்களை சந்தித்து கருத்துக்கள், கோரிக்கைகளை கேட்டறிந்து அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வார்கள். அதன்படி குமரி மாவட்டத்திலும் நேற்று முதல் உங்கள் கனவ சொல்லுங்க திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்ட தொடக்க நிகழ்ச்சி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடந்தது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்து, இந்த திட்ட பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ள தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ள பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கோரிக்கைகள், தேவைகளை கண்டறியும் வகையில், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 262 குடும்பங்களையும், நகர்புறங்களில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 522 குடும்பங்களையும் என மொத்தம் 4 லட்சத்து 97 ஆயிரத்து 784 குடும்பங்களில் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
அதாவது சுமார் 5 லட்சம் குடும்பங்களை கணக்கெடுப்பாளர்கள் சந்தித்து கோரிக்கைகள், தேவைகளை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள ஊரகப்பகுதிகளுக்கு 470 தன்னார்வலர்களும், நகர்ப்புறங்களுக்கு 587 தன்னார்வலர்களும் என மொத்தம் 1,057 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தன்னார்வலர்களும் ஒரு நாளைக்கு 30 குடும்பங்களை கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டும். 15 முதல் 21 நாட்களுக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்யும் விவரங்களை அதற்காக வழங்கப்பட்டுள்ள செல்போன் செயலி மூலம் தரவுகளை பதிவு செய்ய வேண்டும். வீடு, வீடாக செல்லும் இந்த பணியாளர்கள் குடும்பங்களில் உள்ளவர்களிடம் பொறுமையாக பேச வேண்டும். பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மகளிர் திட்ட உதவி திட்ட இயக்குநர்கள் கலைசெல்வி, வளர்மதி, பாலமுருகன், பாலசுந்தரம், தங்கராஜ், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்
மேயர் மகேஷ் பேசுகையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களை கூட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். இப்போது அவர் கொண்டு வந்துள்ள உங்க கனவை சொல்லுங்க திட்டம் பொது மக்களினுடைய கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றக்கூடிய திட்டமாகும். சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள லேப்டாப் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் ஏழைகளின் ஏழை மாணவர்களின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ள திட்டமாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை சொன்னதை செய்யக்கூடியவர். அந்த வகையில் தற்போது மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என தெரிவித்திருக்கிறார். நிச்சயமாக மகளிர் உரிமை தொகை உயரும். இந்த ஆட்சி தொடர்ந்தால் இன்னும் பல்வேறு திட்டங்கள் உங்கள் இல்லங்கள் தேடி வரும். எனவே முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி தொடர அனைவரும், குறிப்பாக பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பக்கபலமாக இருக்க வேண்டும்
சுரேஷ்ராஜன் பேசுகையில், ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் செய்யக்கூடிய அனைத்து கடமைகளையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதனால் தான் முதலமைச்சரை தங்களது தந்தையாக இன்றைய மாணவ, மாணவிகள், குழந்தைகள் பார்க்கிறார்கள். இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சி ஆகும். கடந்த முறை திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களும், இந்த முறை வாக்களிக்கும் வகையில் சிறப்பான திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி இருக்கிறார். சிறப்பாக இந்த அரசு செயல்பட பொதுமக்கள் அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்றார்.
