×

ஜனநாயகன் படத்திற்கு சான்று கோரி வழக்கு நாளை தீர்ப்பு வர வாய்ப்பு? சென்னை ஐகோர்ட் தகவல்

சென்னை: நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்துள்ளார். ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து, புகாரை தாக்கல் செய்யுமாறு சென்சார் போர்டுக்கு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புகார் உள்ளிட்ட ஆவணங்கள் சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, படத்தை ஆய்வு செய்த குழுவில் இடம்பெற்றவர் அளித்த புகார் ஏற்கத்தக்கது தானா? அனைத்தும் விநோதமாக இருக்கிறது. யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறுஆய்வுக்கு அனுப்பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காதது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் ஒரு படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. படத்தில் பாதுகாப்பு படைகளின் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளதால், பாதுகாப்பு படை நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும். சான்றிதழ் வழங்கும் முன்போ, மறுக்கும் முன்போ மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது.

அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது. படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்புவது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு ஜனவரி 5ம் தேதியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சென்சார் போர்டு அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. இந்த விஷயத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. மறு ஆய்வுக்கு அனுப்பிய முடிவு ஒன்றிய அரசு முடிவல்ல. சென்சார் போர்டு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது.

சென்சார் சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை குழுவுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ் வழங்கப்பட்ட பின் அரசால் மறுஆய்வு செய்ய முடியாது. சென்சார் சான்றிதழை வாங்காமல் படத்தை வெளியிடும் தேதி அறிவித்துள்ளனர் என்றார். பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜாகினர்.

சதீஷ் பராசரன் வாதிடும்போது, வழக்கு தொடர்ந்த பிறகுதான் இன்று(நேற்று) அந்த உத்தரவை இணை யதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. உறுப்பினர் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

சென்சார் போர்டு தனது முடிவை மறு ஆய்வு செய்ய முடியாது. படத்தை பார்த்த 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று சொல்ல முடியும்.

புகார் அளித்ததே குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்தான் என்பது இன்று தான் தெரியவந்தது. 5ல் 4 உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை முடிவாக இருக்கும் போது, ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில் இங்கு சிறுபான்மை பெரும்பான்மையாகியுள்ளதாகவே தெரிகிறது என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து தீர்ப்பை தள்ளிவைப்பதாக நீதிபதி தெரிவித்த போது, படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, நீதிமன்றத்திற்கு அழுத்தம் தரவேண்டாம். சென்சார் போர்டுக்கு அழுத்தம் தாருங்கள் என்று கருத்து தெரிவித்து தீர்ப்பை தள்ளிவைத்தார். வழக்கில் ஜனவரி 9ம் தேதி தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளதாக நீதிபதி பி.டி.ஆஷா அறிவித்தார்.

* படம் நாளை ரிலீஸ் இல்லை
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை ஜனநாயகன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்றிரவு அறிவித்தது.

Tags : Chennai High Court ,Chennai ,Madras High Court ,Judge ,P.D. Asha ,Vijay ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...