×

இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்

லாகூர்: இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது. வங்கதேச விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான் ஒருவார கால பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமாபாத்தில் அவர் பாகிஸ்தான் விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ஜாஹீர் அகமது பாபர் சித்துவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ ஊடக பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், இரு நாட்டு விமானப்படை தளபதிகளும் ஜேஎப்-17 தண்டர் விமானங்களை வங்கதேசம் வாங்குவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறி உள்ளது.

இந்த விமானம் சீனா, பாகிஸ்தான் கூட்டாக தயாரித்த போர் விமானமாகும். கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் இந்த விமானத்தை பயன்படுத்தியது. அதில் ஜேஎப்-17 விமானத்தின் போர் திறன்களை நிரூபித்துள்ளதாக பாகிஸ்தான் கூறுகிறது. மேலும் வங்கதேசத்திற்கு மேம்பட்ட விமானப் பயிற்சி மற்றும் பாகிஸ்தான் விமானப்படை நிறுவனங்களில் சிறப்பு படிப்புகள் வரையிலான விரிவான பயிற்சி கட்டமைப்பு மூலம் வங்கதேச விமானப்படைக்கு ஆதரவளிப்பதில் பாகிஸ்தான் மீண்டும் உறுதி அளித்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான வங்கதேசம், தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Bangladesh ,Pakistan ,India ,Lahore ,Bangladesh Air Force ,Chief Air ,Marshal Hassan Mahmood Khan ,Islamabad… ,
× RELATED அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி